நேற்றும் அதற்கு முன் தினமும், சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு நண்பனுடன் சென்றிருந்தேன். பெரிய கண்காட்சி, பல புத்தகங்கள், பல பதிப்பகங்கள். அவ்வளவையும் பார்க்க ஒரு நாள் போதவில்லை. வருடத்துக்கு ஒரு முறை என்பதால் சம்பளத்தில் ஆறில் ஒரு பகுதியை, இந்த வருட புத்தக வேட்டையில் செலவளித்தேன்.
ஞாயிற்றுக் கிழமை சரியான கூட்டம். பலர் புத்தகங்களைவிட, சாப்பிடும் ஐட்டங்களின் மேலேயே ஆர்வமாயிருந்ததைக் காண முடிந்தது. வெளியே வரும்போது, வெளியேறும் கூட்டத்தாரின் கைகளில் புத்தக பார்சல்களைவிட
PopCorn பொட்டலங்களும், டெல்லி அப்பளங்களும் அதிகமாயிருந்தன.
ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது இவைகளைப் பற்றி அல்ல. நேற்று ஒரு கடையில் புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த கடைக்குள் ஒரு குடும்பம் - அப்பா, அம்மா, ஒரு குழந்தை
(நான்குஅல்லது ஐந்து வயதிருக்கும்), நுழைந்தார்கள். அம்மா ஒரு புத்தகத்தைப் பார்ப்பதற்காக கையிலெடுத்தார்கள். உடனே அந்தக் குழந்தை அந்தப் புத்தகத்தை, அவர் கையிலிருந்து பிடுங்கி பிரித்துப் பார்த்தது. பிரித்தவுடன் அந்தக் குழந்தை ஒரு வாக்கியம் உதிர்த்தது. உடனே அந்தப் புத்தகத்தை திரும்ப வைத்துவிட்டு அந்தக் குடும்பத்தினர், அடுத்தக் கடையை பார்க்க சென்றனர்.
அந்தக் குழந்தை உதிர்த்த வாக்கியத்தைக் கேட்டதும் நானும் என் நண்பனும் திடுக்கிட்டுவிட்டோம். எனக்கு பயங்கரக் கோபம், அந்தக் குழந்தை மீது இல்லை! அதன் பெற்றோர் மீது!! எனக்கு கோபம் வந்தா, நான் அதை எங்கே காட்டுவது? அதான் நம்ம வலைத்துணுக்கில் எழுதிட்டேன். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
அப்புறம் அந்த குழந்தை உதிர்த்த முத்து என்னன்னா,
"அம்மா, இதுல தமிழ் இருக்கு, இது எனக்கு வேணாம்."